ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது...?

தமிழ் வருடத்தில் 6-வது மாதமான புரட்டாசி மாதத்தில் சூரியன், கன்னி ராசிக்குள் நுழைகின்றார். கன்னி ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கின்றார்.
 

புதன் விஷ்ணுவின் அம்சமாக பார்க்கபடுகின்றார். சைவப் பிரியரான புதன் பகவான் புரட்டாசி மாதத்தில் ஆட்சி செய்வதால், நாம் சைவம் சாப்பிடுவது சிறந்தது.
 
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால், சனி பகவானால் ஏற்படக்கூடிய வீரியம் குறையும், சங்கடங்கள் அகலும். நாம் ஒவ்வொரு வாரமும் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிக்கும் போது கிடைக்கும் பலனை, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது.
 
பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள்.
 
பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4-6 மணிக்குள் எழுந்து, வீட்டைச் சுத்தம் செய்து காலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளித்து,
நெற்றியில் பெருமாளுக்கு உகந்த நாமம் இட்டுக் கொள்ளவும். 
 
வீட்டில் அழகிய கோலம் இடவும். மாவிலை தோரணம் கட்டவும். வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருக்கும் எண்ணெய், திரியை எடுத்துவிட்டு, புதிதாக எண்ணெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவும். காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள். எளிமையாக ஒரு இனிப்பை இறைவனுக்கு படைக்க விரும்பினால், பொரிகடலை மற்றும் சர்க்கரை கலந்து சுவாமிக்கு படைக்கலாம்.
 
அதன் பின்னர், சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் படைக்கவும். மதியம், பெருமாளை வழிபட்டு, தீபாராதனை, தூப ஆராதனை காட்டவும். நாம் சமைத்த அனைத்து உணவுகளிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு இலையில் வைத்து, காகத்திற்கு வைக்கவும்.
 
நாம் சமைத்து வைத்த உணவுகளை, அருகில் குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கவும். அவர்கள் வாயால் “கோவிந்தா, கோவிந்தா” என்ற நாமம் சொல்ல சொல்லவும். பின்னர், நாம் சாப்பிட வேண்டும். வீட்டில் நீங்கள் விருந்து படைக்க முடியாவிட்டால், ஏதேனும் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கலாம்.