திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

குண்டலினி சக்தியினை எவ்வாறு எழும்புவது? அதனால் என்ன பலன்கள்?

நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல் திறந்தது என்று சொல்வது இதைத்தான். கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.
 
மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை  வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான்  சித்தி எனப்படும்.
 
மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினிகுண்டலினி என்பர். அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயணப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள். அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை  பெறும்போது துரிய குண்டலினி என்பார்கள்.
 
மேலும் குண்டலினியானது தோற்றம், நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும், முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.
 
யோகத்தின் குறிக்கோள், இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும்.