கோவில்களில் தேங்காய் உடைத்து வழிப்படுவது ஏன் தெரியுமா...?
கோவில்களில் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கம் ஆகும். நம் முன்னோர்கள் தொடங்கி இன்று வரையிலும் அந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கோவிலில் இறைவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக மட்டுமே தேங்காய் உடைப்பதை தொன்றுதொட்டு செய்து வருவதாக பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. கோவில்களில் தேங்காய் உடைக்கப்படுவதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.
தேங்காயின் மேல் பகுதியில் வலிமையான ஓடும், அதனுள் மென்மையான பருப்பு போன்ற பகுதியும், அதைத் தொடர்ந்து உட்புறம் நீரும் உள்ளது. இதில் உருண்டையான புற ஓடு என்பது பிரபஞ்சத்தை ஒத்திருக்கிறது. இரண்டுமே கோள வடிவம் கொண்டவை ஆகும். எனவே இது உலக மாயையை குறிக்கிறது. உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கிறது. பரமாத்மாவால் விளையும் பரமானந்த அமிர்தத்தை இளநீர் ஒத்து இருக்கிறது.
அதாவது மாயை காரணமாக பரமாத்மாவை உணராமல், பரமானந்த பிராப்தியையும் பெறாமல் ஜீவாத்மா நிற்கின்றது. அதேபோல வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறைக்கிறது. ஈஸ்வர சந்நிதியில் மாயையை அகற்றி, தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது உணர்த்துகிறது. இவ்வாறான உட்கருத்துகள் பல இருப்பதால்தான் இறைவழிபாட்டில் தேங்காயை முக்கிய பொருளாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.