1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

லட்சுமி குபேர பூஜை வழிபாட்டு பலன்கள் !!

லட்சுமி குபேர பூஜையை, தீபாவளி அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ செய்ய வேண்டும். லட்சுமி குபேர பூஜை செய்தால் அளவற்ற செல்வமும், கல்வி அறிவும் கிடைக்கும்.


குபேரன், மிகச் சிறந்த சிவபக்தர். அமைதியான குணம் கொண்டவர். "ஏழ்மையான ஒருவன் பணக்காரனாக வேண்டு மென்றால், சாந்த குணம் தேவை.
 
அவன் மற்ற பணக்காரர்களைப் பார்த்து ஏங்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பணக்காரர்களின் பின்னணியில் எந்த அளவுக்கு உழைப்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்'' என்பதே குபேர தத்துவம். குபேரனுக்கு மொத்தம் 2 மனைவிகள்...
 
ஒருத்தி பெயர் சங்க நிதி, மற்றொருத்தி பெயர் பதுமநிதி. இதில், சங்கநிதியின் கையில் எப்போதும் வலம்புரிச் சங்கு இருக்கும். செல்வச் செழிப்பைக் குறிக்கும் அடையாளம்தான் வலம்புரிச்சங்கு. பதும நிதி, தன் கையில் தாமரை வைத்திருப்பாள்.
 
தாமரை, கல்வி அறிவைக் குறிப்பதாகும். இவர்கள் இருவரிடமும் தான், தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் குபேரன் கொடுத்து வைத்துள்ளார். எனவே நீங்கள் குபேரனை வழிபடும் போது, சங்க நிதியையும் பதும நிதியையும் மறக்காமல் வழிபட வேண்டும்.
 
தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.
 
சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.
 
பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைத்து பூஜை செய்யலாம்.