செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (12:58 IST)

நாளை முதல் சிறப்பு பேருந்துகள்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

வரும் வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து நாளை முதல் சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் விடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு பேருந்துகளை கண்காணிப்பதற்காக தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது என்பது தெரிந்ததே. இது குறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்து கழகங்களில் 20,334 பேருந்துகள்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அரசு விரைவுப் பேருந்துகளில் இதுவரை 72,597 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
 
சென்னையில் இருந்து நாளைமுதல் 3-ம் தேதி வரை தினமும்இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 9,806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6,734 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் வகையில் நவ.5 முதல் 8-ம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்பு பேருந்துகள், பிறஊர்களில் இருந்து மற்ற ஊர்களுக்குச் செல்ல 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 17,719 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
சென்னையில் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம்அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூந்தமல்லி, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகளைப் பிரித்து இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
முன்பதிவு செய்துள்ள விரைவுப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளி சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்று, அங்கிருந்து ஊரப்பாக்கம் தற்காலிகப் பேருந்து நிறுத்தம் சென்று, அங்கிருந்து புறப்பட்டு தாம்பரம், பெருங்களத்தூரில் பயணிகளை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
பேருந்துகள் இயக்கம் குறித்து புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 044-24749002, 1800 425 6151 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.