வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

எந்த காரியமும் வெற்றிகரமாக அமைய விஜயதசமி பூஜை...!

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது  நவராத்திரி பூஜையாகும்.
நவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வழிபாடு செய்வதுண்டு. அன்று அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.
 
விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம்  நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், நாமும் அதை  விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.
 
பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி  கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.
 
சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில், ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.  சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது  படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.