புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By

நவராத்திரி விழா: 9 படிகள் உணர்த்தும் தத்துவம் என்ன...?

நவராத்திரியின் போது வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு  தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.

1ஆம் படி: கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.
 
2ஆம் படி: அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகளில் கொலுவில் வைக்க வேண்டும்.
 
3ஆம் படி: மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.
 
4ஆம் படி: நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.
 
5ஆம் படி: ஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.
 
6ஆம் படி: இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய  ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.
 
7ஆம் படி: மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.
 
8ஆம் படி: தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.
 
9ஆம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும். மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கத்தில் உள்ளது.