ஐப்பசி பவுர்ணமி தினத்தில் சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேகம் !!
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். தானங்களில் சிறந்த தானம் அன்னதானம்.
சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஐப்பசி பவுர்ணமி அன்று சிவன் கோவிலில் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும்.
இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை அன்னத்வேஷம் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.