ஆடியில் செவ்வாய் கிழமையும் விஷேசம்; எப்படி தெரியுமா...?
ஆடி செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சளை பூசிக்குளி என்பது பழஞ்சொல். இதில் இருந்தே ஆடிச் செவ்வாயன்று எண்ணெய் தேய்த்து நீராடுதலின் முக்கியத்துவம் விளங்கும். அவ்வாறு செய்தால் வீட்டில் மங்கலம் தங்கும் என்பது மரபு.
தமிழகத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று ‘அவ்வை நோன்பு’ கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடி செவ்வாயில், ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அன்று முழுவதும் கைக்குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் இடம் கிடையாது. இரவு பத்து மணியளவில் பூஜை தொடங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும், அம்மனின் கதையையும் மற்றவர்களுக்கு கூறுவார்.
பின்னர் பூஜை நடக்கும். அன்று உப்பில்லாமல் அரிசி மாவில் செய்யப்படும் கொழுக்கட்டைகளே பிரசாதம். விரதமிருக்கும் பெண்கள் மட்டுமே அதை உண்ணலாம். மறுநாள் காலையில் தான் ஆண்கள் வீட்டுக்குள் வரலாம்.
இந்த பூஜை பிரசாதங்களை ஆண்கள் கண்டிப்பாக பார்க்கக்கூடாது என்கிறார்கள். இந்த பூஜையை கடைப்பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்பது ஐதீகம். மணமாகாத பெண்களுக்கும், குழந்தையில்லா பெண்களுக்கும் இந்த பூஜை ஒரு வரப்பிரசாதம்.