திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததாக கூறப்படுவது ஏன் தெரியுமா....?

வெள்ளி கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்தது. அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அனைத்துமே மங்களகரமானது. இந்நாள் எல்லா அம்பிகைக்கும்  உகந்த நாள். அதிலும் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் என்றால், இன்னமும் சிறப்பு வாய்ந்தது. 

இம்மாதத்தில் கூழ் வார்த்தல், பால்குடம் ஏந்துதல், தீமிதித்தல் என்று அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில்  அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
 
பூமாதேவி அம்மனாக அவதரித்தது இந்த ஆடி மாதத்தில் என்பதால்தான் இம்மாதம் அத்தனை சிறப்புகள் வாய்ந்தது. திருமணமாகாத பெண்கள் ஆடி செவ்வாய்,  வெள்ளிகளில் விரதமிருந்து அம்மனை வழிப்பட்டால் நல்ல கணவன் அமைவான். வீடுகளில் கூழ்வார்த்து அம்பிகையை வழிப்பட்டால் ஆண்டு முழுவதும் அம்மனை வணங்கியதன் பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். ஆடிமாதங்களில் அம்மனுக்கு நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு  அம்மனுக்கு அணிவித்த வளையலை அணிந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டுமென்பது ஐதீகம்.
 
காற்றும், மழையும் ஆடிமாதத்தில் அதிகம். காற்றை காளியும், மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துகின்றனர். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும்விதமாக இந்த மாதங்களில் கூழ்வார்த்து வழிபடுகின்றனர்.  
 
அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண்  குளிர்ந்தால்தான் குறையும். காற்றின் வேகம் குறையவும், மழை வேண்டியும் இத்திருவிழாக்களை நடத்துகின்றனர்.