1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (10:55 IST)

’யாரும் அழைக்க வேண்டாம்; என்னை விட்டுவிடுங்கள்’ - பெருமாள் முருகன்

பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று சில சாதிய, மதவாத அமைப்புகளால் கிளப்பிவிடப்பட்டதும், எழுத்தாளர் அச்சுறுத்தப்பட்டதும், வருவாய்த் துறை அதிகாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதும் தெரிந்ததே.
 

 
அப்போது நிலவிய பரபரப்பான சூழலில் பெருமாள் முருகன் அந்த நாவலைத் திரும்பப்பெற்றுக் கொள்வதாகவும், தொடர்ந்து அதை விற்பனை செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
 
பின்னர், மாதொருபாகன் ‘நாவலுக்கு தடைவிதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், “ஆசிரியர் பெருமாள்முருகன், புதைக்கப்பட்ட விஷயங்களில் இருந்து எதையெல்லாம் சிறந்ததாக எழுத முடியும் என நினைக்கிறாரோ, அதை துணிவோடு பயமின்றி எழுதட்டும்“ எனக் கூறியிருந்தது.
 
இந்நிலையில், எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகன் தனது புதிய கவிதைத் தொகுப்பான ‘கோழையின் பாடல்கள்’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு தில்லி தீன்மூர்த்தி பவனில் திங்களன்று மாலை எளிமையான முறையில் நடைபெற்றது.
 
நிகழ்வில் பேசிய பெருமாள் முருகன் தன்னை ஊடகங்களிலோ, இலக்கிய வட்டங்களிலோ பேச அழைக்க வேண்டாம் எனவும் எனக்கு வலிமை தரும் மெளனத்துடனேயே என்னை விட்டுவிடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
 
மேலும், ’சாதியை மையமிட்டதாகத் தன்படைப்பு இனியும் அமையும் என்றும் எதார்த்தங்களை இனி தன் படைப்பில் படைக்கப்போவதில்லை என்றும் எழுத்துக்கள் எவ்வாறு பொருள் கொள்ளப்படும் என்ற கவனத்துடனேயே தனது எழுத்துக்கள் அமையும் என்றும் அவர் கூறினார்.
 
அவர் தமிழில் வாசித்த அறிக்கையினையும் அவரது பேச்சினையும் ஆங்கிலத்தில் ஆ.இரா.வெங்கடாசலபதி மொழியாக்கம் செய்தார். முன்னதாக, கவிதை நூலை, பிரபல கவிஞர் அசோக்வாஜ்பாய் வெளியிட்டார்.