வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (12:33 IST)

ஆதிதிராவிடர் விடுதிகளில் அவலம்.! திமுக ஆட்சியை சுட்டெரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! இபிஎஸ்...

edapadi
ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2021 மே மாதம், தமிழகத்தில் விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, நான் ஏற்கெனவே ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள ஏழை, எளிய ஆதி திராவிடர் மாணவர்கள் அடிப்படை வசதியின்றி சொல்லொண்ணா துயரம் அனுபவித்து வருகிறார்கள் என்பதையும், பல இடங்களில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது திமுக அரசு எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளேன்.
 
புதுக்கோட்டையில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம், தென்காசி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்க மறுத்த நிகழ்வு, கள்ளக்குறிச்சியில் தாழ்த்தப்பட்டோர் தங்கியுள்ள காலனியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை என்று திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடந்த பல்வேறு தாக்குதல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
 
பட்டியலின மக்களின் வேதனைகளை பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாக சுட்டிக்காட்டியும், இந்த விடியா திமுக அரசு தாழ்த்தப்பட்ட மக்களின் குறைகளைப் போக்க எந்த உறுதியான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மத்திய அரசிடம் இருந்து பட்டியலின மக்களுக்கு வரும் மத்திய நிதியை ஆதி திராவிடர் நலத்துறைக்கு முழுமையாகப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலான நிதி திருப்பி அனுப்பப்படுவதையும், ஆதி திராவிட நலனுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை, மகளிர் உரிமைத் தொகைக்காக மடை மாற்றம் செய்யப்பட்டதையும் நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளேன்.
 
சமூக நீதி என்று வாய் கிழிய பேசும் இந்த திமுக அரசில் தமிழகம் எங்கும் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் உள்ள சுமார் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளில் சுமார் 82,500 பள்ளி மாணாக்கர்களும், சுமார் 16,500 கல்லூரி மாணாக்கர்களும் என்று சுமார் 99 ஆயிரம் மாணவ, மாணவியர் தங்கியுள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விதிகளின்படி, உணவுப்படி வழங்கப்படுவதாகவும், இது தவிர பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், சோப்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ. 100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ. 150-ம் வழங்கப்படுவதாகவும் இந்த திமுக அரசு தெரிவித்துள்ளது.
 
மைலாப்பூரில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் பல கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ளதாகவும், அங்குள்ள கழிவறைகள் சுகாதாரமின்றி. கதவுகள் உடைந்துள்ள நிலையில் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் வெளியாட்கள் வளாகத்தில் மதுபானங்கள் அருந்துவதாகவும், அசைவ உணவு வழங்கப்படும்போது 3-ல் 1 பங்கு மாணவர்களே சாப்பிடக்கூடிய அளவில் உணவு வழங்கப்படுவதால், பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் பசியோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், இது போன்ற பல குறைகள் குறித்து பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இங்கு தங்கியுள்ள மாணவர்கள் வேதனையுடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
 
நான் ஏற்கெனவே, திமுக அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு விடுவிக்க வேண்டிய நிதியை கால தாமதமாக வழங்குவதால் அங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை விளக்கி உடனுக்குடன் நிதியை விடுவிக்க திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆதிதிராவிடர் விடுதிகளில் தங்கியுள்ள மாணாக்கர்கள் ஒருமித்த குரலில் அரசு, உணவுக்கு வழங்கும் பணம் குறைவு என்றும், உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதாகவும், அசைவ உணவுகள் பரிமாறப்படும்போது 100 மாணவர்கள் உள்ள விடுதிகளில் 30 முதல் 40 பேர் உண்ணக்கூடிய அளவே அசைவ உணவு சமைக்கப்படுவதால், அந்நாட்களில் பெரும்பாலான மாணவர்கள் பசியுடனே இருப்பதாகவும் புகார் தெரிவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஓட்டுக்காக "நாங்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள், சமூக நீதியைக் காப்பதே எங்கள் உயிர் மூச்சு என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டும் திமுக, சென்னை கோடம்பாக்கத்தில் ஆதி திராவிடர் நலத்துறைக்கு சொந்தமான சொத்தை தன் கட்சி பத்திரிகை அலுவலகமாக மாற்றியது பற்றிய சர்ச்சை இன்று வரை திமுக-வால் தெளிவுபடுத்தப்படவில்லை. இத்தகைய மக்கள் விரோத ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, தமிழகத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

 
எனவே, வயிற்றுப் பசி போக்க அல்லலுறும் படிக்கும் ஆதிதிராவிட மாணாக்கர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் திமுக ஆட்சியை சுட்டெரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. உடனடியாக தமிழ் நாடு முழுவதும் சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டுமென்று திமுக அரசை எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.