’கமலை தமிழக அரசு ஏன் பாராட்டவில்லை’ - கொந்தளிக்கும் சீமான்
செவாலியர் விருது பெற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு ஏன் தமிழக அரசு பாராட்டு தெரிவிக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடிகர் திலகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே வருது வழங்கப்படுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால், இதுவரை தமிழக அரசு சார்பில் இருந்து எந்தவிதமான அறிவிப்புகளோ, வாழ்த்துச் செய்திகளோ வெளியிடப்படவில்லை. இதற்கு இயக்குநரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், செவாலியர் விருதுக்காக திரையுலகமே அவரைச் சந்தித்துப் பாராட்டுகையில், தமிழக அரசிடம் இருந்து மனதார ஒரு வாழ்த்துச் செய்தியோ, பரிசுகளையோ ஏன் அறிவிக்கவில்லை என்றும் கமல்ஹாசனை தனிச்சொத்தாகப் பார்க்கக் கூடாது. ஒட்டுமொத்த தேசத்தின் சொத்தாகத்தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், சமூகப் பற்றுள்ள கலைஞன் கமல்ஹாசன் என்றும் எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக அரசுக்கு இணையாக அவர் பங்காற்றியிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உடை, காலணி வாங்கித் தருகிறார். ஏழை மக்களுக்கு அரிசி வாங்கித் தருகிறார். பொறுப்புள்ள ஒரு கலைஞனை அங்கீகரிப்பது தேசத்தின் பெருமை என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.