புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2025 (17:29 IST)

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? என முதல்வரிடம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் கூறியதாவது:
 
புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அப்பள்ளிகளின் ஆசிரியர்களே அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள், தமிழகத்தின் கல்வித்துறை தரம்தாழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் நமக்கு உணர்த்துகிறது.
 
“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்று கல்வியின் அவசியத்தை உலகிற்கு எடுத்துக் கூறிய நமது தமிழகத்தில், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்களால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயந்து தயங்குகின்றனர் என்பது வேதனைக்குரியது. 
 
பள்ளி முதல் கல்லூரி வரை தொடரும் இந்த பாலியல் வன்கொடுமைகளால் பெண் பிள்ளைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா? அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய உங்கள் இரும்புக்கரம் எங்கே முதல்வரே? 
 
எனவே, “எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி” என்று இனியும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், அரசுக் கல்வி நிலையங்களில் தலைவிரித்தாடும் பாலியல் குற்றங்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran