வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (20:52 IST)

நேரு பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது..! காங்கிரஸ் தலைவர்களை இழிவுபடுத்துவதா?. கே.எஸ் அழகிரி கண்டனம்..!

alagiri
நேருவைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர் என்று முழு பூசணிக்காயை  சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
 
குஜராத்தின் முதல்வராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்ட போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல வேடிக்கை பார்த்து, சிறப்புப் புலனாய்வு விசாரணையிலிருந்து தப்பி, இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார். அதற்குத் துணையாக இருந்த அமித்ஷா இன்றைக்கு உள்துறை அமைச்சராக இருக்கிறார் என்று அவர் விமர்சித்துள்ளார்.
 
இத்தகைய பொறுப்புகளை இவர்கள் ஏற்றிருப்பது இந்தியாவிற்கே கேடு விளைவிக்கக் கூடியதாகும் என்றும் அதைத் தான் இந்தியா இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்றும் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
 
ஆயிரம் மோடிகள் ஒன்று சேர்ந்தாலும் இந்தியாவின் வளர்ச்சியில் பண்டித நேரு, இந்திரா காந்தி ஆகியோரது பங்களிப்பை இத்தகைய அவதூறு பிரசாரங்களினால் மறைத்துவிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
 
ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆயுள் காப்பீட்டு கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி, பிரதமர் நேருவைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது  என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பண்டித நேருவை விமர்சனம் செய்கிற அதேநேரத்தில் அன்னை இந்திரா காந்தியையும் விமர்சனம் செய்திருக்கிறார்.  இத்தகைய வரலாற்றுச் சாதனைகள் படைத்தவர்களை  பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
 
1947 ஆகஸ்ட் 15, ஜனவரி 26, 1950 ஆகிய இரு நாட்களை தவிர, தொடர்ந்து 22 ஆண்டுக்காலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றாத, அது ஒரு துண்டு துணி என்று கொச்சைப்படுத்திய பாரம்பரியத்தில் வளர்ந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் பாரம்பரிய தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகங்களுக்கு இணையாக ஆர்.எஸ்.எஸ். வழிவந்த தலைவர்களில் எவரது பெயரையாவது மோடியால் ஒப்பிட்டுக் கூற முடியுமா ?  என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

 
மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்கிறீர்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளைக் குவித்து ஊழலை வளர்க்காதீர்கள். இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்று கே.எஸ்  அழகிரி  குறிப்பிட்டுள்ளார்.