செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (16:39 IST)

கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? தினகரன் கண்டனம்

ttv dinakaran
மக்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகம், மக்கள் வரிப்பணமான 40 கோடி ரூபாயை செலவு செய்து கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன ? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்த அவசரம் காட்டும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து, தங்களின் வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்து லட்சக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் எனும் தனியார் நிறுவன கார்பந்தயத்தை வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது புயல் பாதிப்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை கடும் கோபமடையச் செய்திருக்கிறது. உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி உடுத்த உடையின்றி என எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி சிரமத்திற்குள்ளாகியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகம், மக்கள் வரிப்பணமான 40 கோடி ரூபாயை செலவு செய்து கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன ?

கார்பந்தயம் நடத்த இருங்காட்டு கோட்டையில் மைதானம் இருக்கும் போது ஓமந்துரார் அரசு மருத்துவமனை, அண்ணா சாலை, துறைமுகம் என பரபரப்பாக இயங்கும் சாலைகளை மறித்து தனியார் கார்பந்தயத்தை நடத்தி இடையூறு ஏற்படுத்துவது தான் அரசின் சாதனையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறும் திமுக அரசு, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை தவிர்க்கும் வகையில் கார் பந்தயத்தை ரத்து செய்வதோடு, கனமழையால் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசையும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.