இவ்வளவு பிரச்சனையிலும் வாய் திறக்காத நிதியமைச்சர் ஓ.பி.எஸ்.!
பிரதமர் மோடி நேற்று செவ்வாய்கிழமை இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும், தற்போது கையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கையில் உள்ள 500, 1000 ரூபாய்க்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது.
இதனால், தற்போது பொதுமக்கள் போக்குவரத்து, மருத்துவம், உணவு உள்ளிட்ட தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இந்த திடீர் அறிவிப்பால் மாற்று வழி ஏதும் தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர்.
ஆனால், பொதுமக்கள் சிரமங்கள் குறித்தான எந்த கவலையும் இல்லாமல், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அமைதியாய் இருக்கிறார். போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய மாநில அரசின் அமைச்சர்கள் மவுனம் சாதிப்பது எதனால் என்று தெரியவில்லை. போக்குவரத்து, மருத்துவமனை ஆகியவற்றில் ஏற்படும் சிறு, சிறு சிரமங்களை மாநில அரசுதான் தீர்க்க வேண்டும்.
ஆனால், தமிழக அமைச்சர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சிகிச்சைப் பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டி மட்டும், ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
இவ்வளவு ஏன்? கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி, முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி தேனி மாவட்டம் போடியில் உள்ள பாலசுப்பிரமணியம் கோவிலில் நிதி அமைச்சர் ஓ.பன்னீசெல்வம் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால், பொதுமக்கள் நிதியமைச்சர் என்ன செய்கிறார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.