திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 31 ஜனவரி 2024 (13:53 IST)

தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்!'' -முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், சமீபத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர் ''மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ''உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்!'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

''ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.
 
இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்.
 
அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே #CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
 
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. 
 
மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
 
உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்!''என்று தெரிவித்துள்ளார்.