ஜாதி, மதத்தை உரம் போட்டு வளர்க்கும் கட்சி திமுக: விளாசிய துரைசாமி!
பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி திமுகவை கடுமையாக விமர்சித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவரான எல்.முருகனை திமுக துணை பொதுச் செயளாலர் வி.பி.துரைசாமி சந்தித்த பின்னர், இதுகுறித்து பேட்டியளித்த விபி துரைசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுவதாக கூறினார். அவருடைய இந்த பேட்டி திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து விபி துரைசாமியிடம் இருந்த துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கப்பட்டதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
திமுக தலைமையின் இந்த செயல் குறித்து, வி.பி.துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நான் பாஜவில் இணைகிறேன் என தெரிவித்தார். சொன்னதை போல இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார் வி.பி.துரைசாமி. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது,
நான் திமுகவில் நீண்ட காலம் உழைத்தவன். கடந்த சில வருடங்களாக அந்த இயக்கம் துவங்கப்பட்ட நோக்கத்தில் இருந்து பிறழ்ந்து செல்கிறார்கள். பாஜக முன்னேறிய சமூக மக்களுக்கான கட்சி என்று எங்களுக்கு போதித்து விட்டார்கள்.
ஆனால், இன்று தான் தெரிந்தது பாஜக அனைத்து மக்களுக்குமான கட்சி. அறிவாலயத்தில் இருந்து கமலாலயத்தில் வந்துள்ளேன். ஜாதி, மதம் இல்லை என்று பேசுகிறார்கள். ஆனால், அங்கு தான் ஜாதி, மதத்தை உரம் போட்டு வளர்க்கிறார்கள்.
நான் பதவிக்காக அலைபவன் அல்ல. இன்னும் நிறைய பேர் திமுகவில் இருந்து விலக காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அண்ணா, பெரியார் இருந்திருந்தால் இதற்கு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.
பாஜக அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தலைவர் பதவி கொடுத்ததுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அருந்ததிய மக்களும் தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை பார்க்கின்றனர். எனவே நான் இங்கு இணைத்துள்ளேன் என்றார்.