ரஜினி பற்றி வேண்டாம் ; அறிவுப்பூர்வமாக ஏதேனும் கேளுங்கள் - நிருபரிடம் எகிறிய விஜயகாந்த்
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபமாக கருத்து தெரிவித்தார்.
கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதில் கோபமடைந்த விஜயகாந்த் “ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி என்னிடம் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்காதீர்கள். ஏதேனும் அறிவுப்பூர்வமாக கேள்வி இருந்தால் கேளுங்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் எனது சிறந்த நண்பர்” என அவர் பதிலளித்தார்.