கட்சிக்குள் குழப்பமா ? யார் சொன்னது ? – கேப்டன் மகன் தடாலடி!
தே.மு.தி.க கட்சியில் குழப்பமா என்றக் கேள்விக்கு விஜய்காந்தின் மகன் விஜய் பிரபாகரன் பதிலளித்துள்ளார்.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிக்கொண்டிருக்க தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியும் முன்னாள் எதிர்க்கட்சியுமான தே.மு.தி.க. கிணற்றில் போட்டக் கல் போலக் கிடக்கிறது. தே.மு.தி.க விடம் இருந்து சமீபகாலமாக எந்தவொரு நேர்மறையான அரசியல் நகர்வும் இல்லை.
அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலமில்லாமல் சிலக் காலமாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்த காலத்தில் கட்சியின் அதிகாரம் முழுவதும் விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவிடமும், அவரது மைத்துனர் சுதீஷிடமும் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கட்சியின் முக்கிய முடிவுகள் யாவும் இவர்கள் இருவரின் மேற்பார்வையிலேயே நடைபெற்று வருகிறது. தற்போது தேமுதிக வின் புதுமுகமாக விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் முன்னிறுத்தப் படுகிறார். இது கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் சில முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
சிகிச்சைக்காக அமெரிக்க சென்றுள்ள விஜயகாந்திற்குப் பதிலாக அரசியல் கூட்டங்களில் விஜய் பிரபாகரனே கலந்து கொண்டு வருகிறார். வட சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்ட விழாவில் அவர் சமீபத்தில் கலந்துகொண்டார். அப்போது கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் உண்மையா என்றக் கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர் ‘ கட்சிக்குள் குழப்பமா ? யார் சொன்னா ?’ எனக் காட்டமாகப் பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர் ’கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் என் மேல் பாசமாகவே உள்ளனர். என் மாமா சுதீஷ்தான் என்னைப் பள்ளி, கல்லூரிகளில் சேர்த்துப் படிக்க வைத்தார். அதுபோல அரசியலுக்கும் அழைத்து வந்தார். கேப்டன் விரைவில் குணமாகி வருவார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தேமுதிக வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கும்’ எனப் பதிலளித்துள்ளார்.