வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 மே 2020 (10:45 IST)

ஏன் அப்படி செய்தேன்? ஓவர் நைட்டில் வைரலான ரவுடி ஆணையர் பேட்டி!

வாணியம்பாடியில் வண்டிக்கடை வியாபாரிகளின் வண்டிகளை கவிழ்த்துவிட்டது ஏன் என நகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொழில்கள் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லுபடியாகாது என்று கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை மெல்ல திரும்ப தொடங்கியுள்ளது. எனினும் மக்கள் வார அட்டை வழிமுறையை பின்பற்றி கடைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அந்த வகையில் வாணியம்பாடி பகுதியில் வண்டிக்கடை வியாபாரிகள் இயல்புநிலை திரும்பிவிட்டதாக எண்ணி கடைகளை திறந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு விரைந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அங்குள்ள பழ வண்டிகளில் இருந்த பழங்களை தூக்கி எறிந்தும், பழ தட்டுகளை கவிழ்த்துவிட்டும் அவர்களை கடைகளை திறக்கக் கூடாது என்று கண்டித்திருக்கிறார்.
 
நிலைமையை எடுத்து சொல்லி அவர்களை கடைகளை மூட சொல்லாமல் நகராட்சி ஆணையர் ஒரு ரவுடி போல செயல்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தாமஸ் ஏன் அப்படி செய்தேன் என விளக்கம் அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பல்வேறு பகுதிகளில் பரவக்கூடிய நிலை வாணியம்பாடி பகுதியிலும் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இச்செயலை செய்துவிட்டேன். இதற்காக வருந்துகிறேன். பல முறை எடுத்துக் கூறியும் வியாபாரிகள் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனவே இப்படி ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார்.