செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 மே 2020 (08:41 IST)

தமிழகத்தில் பேருந்து சேவை தொடக்கம் – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்குக்குப் பின் போக்குவரத்து சேவையைத் தொடங்கலாமா என்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 17 உடன் ஊரடங்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு, போக்குவரத்து துறை செயலாளர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பொது முடக்கம் முடிவடையும் போது 50% பேருந்துகளை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு முகக்கவசம், கையுறை மற்றும் சானிட்டைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் இப்போது பேருந்து சேவையை தொடங்குவது என்பது சரியான முடிவா என மாவட்ட ஆட்சியர்களிடம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மே 17-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

இதற்கிடையிலே மே 17 ஆம் தேதிக்கு பின்னர் லாக்டவுன் 4.0 வித்தியாசமாக செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.