பால் விலை உயர்வு வரவேற்கத்தக்கது: வைகோ
தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது. இந்த விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், பால் உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள் என்றும் விலை உயர்வுக்கு பின்னரும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஆவின் பால் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கதக்கது என்றும், ஆனால் அதே நேரத்தில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட அளவுக்கே, விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், விற்பனை விலையை அதிகமாக உயர்த்தியது சரியல்ல எனவும் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.