செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:19 IST)

’உங்கள் பட்ஜெட்டில் குறை இருக்கிறது’ - சுட்டிக்காட்டும் சசிகலா

தமிழகத்திற்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் தமிழ் நாட்டிற்கு புதிய ரயில்கள் மற்றும் ரயில்வே திட்டங்கள் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.


 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2017-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், 2017-18 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி 6.75 சதவீதம் முதல் 7.5 சதவீதமாக இருக்கும் எனவும், 2016-17 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தனி நபர் வரிச் சலுகை, நிறுவனங்கள் மீதான வரி குறைப்பு, விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும் சலுகைகள், ஏழைகளுக்கான வறுமை ஒழிப்பு, வீட்டு வசதித் திட்டங்கள், பணமில்லா பரிவர்த்தனைக்கு சலுகைகள், புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவல்ல திட்டங்கள் என பல சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என மக்கள் பெறும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பண மதிப்பிழப்புத் திட்டத்தால் அரசு பெற்ற பயனை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதும் மக்கள் விருப்பம்.

எதிர்பார்த்தபடி விவசாயம், அதைச் சார்ந்த துறைகள் மற்றும் ஊரக பகுதிகளுக்கான திட்டங்களுக்கு 24 சதவீதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வள கட்டமைப்பை மேம்படுத்த 2,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியம், சிறுபாசனத்திற்கு 5,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியம் போன்றவை வரவேற்கத்தக்கது. எனினும் இந்நிதியங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அவற்றில் இருந்து தமிழ் நாட்டிற்கு போதுமான ஒதுக்கீடு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

50 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கன.

எனினும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கடந்த காலங்கள் போல் அல்லாமல், அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்தால், கிராமப்புற தொழிலாளர்களுக்கான சம்பளத்தை காலத்தே கொடுக்க ஏதுவாகும்.

மேலும், தமிழகம் சந்தித்து வரும் வறட்சியை எதிர்கொள்ள தமிழ் நாட்டிற்கு இத்திட்டத்தின் கீழ் கூடுதல் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு வறட்சியால் பாதித்து உள்ளதைக் கருத்தில் கொண்டு, வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.

நபார்டு உருவாக்கியுள்ள நீண்டகால பாசன திட்ட நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி இதுவரை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. தமிழ் நாட்டில் செயல்படுத்தப்படும் தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு, காவேரி-குண்டாறு இணைப்பு போன்ற திட்டங்களுக்கு இந்த நிதியிலிருந்து மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கேட்டுக் கெள்கிறேன்.

விவசாய உற்பத்தியை உணவு பதனிடும் தொழிற்சாலைகளுடன் இணைக்க தமிழ் நாட்டில் 398 கோடி ரூபாய் செலவில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் திட்டம் அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இது குறித்து பட்ஜெட் அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த முயற்சிகள் விவசாயிகளின் வருவாயைப் பெருக்க உதவும்.

கூடுதலாக 5,000 மருத்துவ முதுகலைப் படிப்புகள் உருவாக்குவதையும், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ முதுகலைப் படிப்புகளை ஊக்கப்படுத்துவதையும் வரவேற்கிறேன்.

கிராமப்புற மாணவர்களின் பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை தமிழ் நாட்டு மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் கருவிகளுக்கான விலை நிர்ணயித்தல் குறித்த கொள்கை முடிவு மருத்துவச் செலவினத்தைக் குறைக்கும் என நம்புகிறேன்.

ஐந்தாண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே பாதுகாப்பு நிதியம் ரயில்வே பயணத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் என நம்புகிறேன்.

கடற்கரையோரச் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 2,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் நாட்டின் மகாபலிபுரம்-கன்னியாகுமரி இடையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என நம்புகிறேன்.

மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்களை இணைத்து ஒரு புதிய நிறுவனம் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலம் தமிழ் நாட்டில் ஒரு புதிய பெட்ரோலிய ஆலை குழுமத்தை உருவாக்கி வேலைவாய்ப்பைப் பெருக்கிட வேண்டும்.

50 கோடி ரூபாய்க்குக் குறைவாக விற்று முதல் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அதிகமாகக் கொண்டுள்ள தமிழ் நாட்டில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு இது பேருதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளோருக்கான வருமான வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கும் அதே வேளையில் இத்தகைய வரிச் சலுகை இதர வருமான வரி செலுத்துவோருக்கு அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறித்து சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால், அதே சமயம் கீழ்க்கண்ட குறைபாடுகளும் நான் சுட்டிக்காட்டும்படி உள்ளன.

ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இதற்கான நிதியை ஒதுக்கி விரைவில் பணிகளைத் தொடங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் நாட்டிற்கு புதிய ரயில்கள் மற்றும் ரயில்வே திட்டங்கள் ஏதும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

14-ஆம் நிதிக்குழு பரிந்துரையில் பாதிப்படைந்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வீட்டுக் கடன் வாங்கியுள்ள நடுத்தரப் பிரிவு மக்களுக்கு வருமான வரிச் சலுகை உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

எனவே, பொதுவாக இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், இதில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைக் களைந்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உரிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொள்கிறேன்.