புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (10:29 IST)

சிபிஐ பாஜகவின் அறிவிக்கப்படாத அணியா? சர்ச்சையை கிளப்பும் உதயநிதி!

சிபிஐ பாஜகவின் அறிவிக்கப்படாத அணியாக அது செயல்படுகிறதோ என தோன்றுகிறது என உதயநிதி ஸ்டாலின் பாபர் மசூதி தீர்ப்பு குறித்து ட்விட். 
 
1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கலவரங்கள் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி, கல்யாண்சிங், உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. 
 
கடந்த 28 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தின் நேரடி பார்வையில் சிபிஐ நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல என்றும், அது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக எந்த சாட்சிகளோ, ஆதாரங்களோ சமர்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ள நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய 32 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், பாபர் மசூதி இருந்தது அவ்வழிபாட்டுத்தலம் நம் கண் முன்னே இடிக்கப்பட்டது. பாஜக அழைப்பில் அதிமுகவினர் உட்பட பலர் கரசேவைக்கு சென்றது எல்லாம் நிஜம். இவ்வளவு சான்றுகள் இருந்தும் சிபிஐ அவற்றை நிரூபிக்காமால் விட்டது, பாஜகவின் அறிவிக்கப்படாத அணியாக அது செயல்படுகிறதோ என தோன்றுகிறது.
 
இப்படி தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரத்தை நசுக்கி அவற்றை தனது துணை அமைப்புகளாக்கும் பாஜகவின் செயல் இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரானது. இந்திய ஒன்றியத்தை காக்க நடுநிலையாளர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமில்லாமல் உரக்க பேச வேண்டிய தருணம் இது என பதிவிட்டுள்ளார்.