உடுமலை சங்கர் படுகொலை ; 11 பேர் குற்றவாளி : நீதிமன்றம் தீர்ப்பு
உடுமலைப்பேட்டையில் ஆணவ கொலை செய்யப்பட்ட சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
உடுமைலைப்பேட்டி அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர், பழனியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். அந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பட்டப்பகலில் அவர்கள் இருவரையும் ஒரு கும்பல் நடுரோட்டில் அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கௌசல்யா படுகாயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கௌசல்யாவின் மாமா பாண்டித்துரை உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வந்தது. அந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி (இன்று) தீர்ப்பு அறிவிக்கப்படும் என ஏற்கனவே நீதிபதி அறிவித்துள்ளார். தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் காலை 11 மணியளவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், நீதிபதி அலமேலு நடராஜன் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தண்டனை விபரம் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
அதேநேரம், உணர்ச்சி வேகத்தில் இந்த கொலையை செய்து விட்டதால், தங்களுக்கு குறைந்த பட்ச தண்டனையை வழங்குமாறு குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.