திருச்சி அல்ல.. திடீரென மாநாடு இடத்தை மாற்றிய நடிகர் விஜய்.. எந்த இடம்?
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு திருச்சி அருகே நடைபெறும் என்று செய்தி வெளியான நிலையில் தற்போது இடம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு திருச்சி பொன்மலை அருகே உள்ள திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக அனுமதி பெறும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே மதுரை மற்றும் கோவையில் மாநாடு நடத்த இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திருச்சியில் மாநாடு நடத்த இருப்பது கிட்டத்தட்ட உறுதி என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே ஒரு இடத்தை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை செப்டம்பர் 22 அல்லது 26 ஆம் தேதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தற்போது தேர்வு செய்திருக்கும் இடத்தில் 3 லட்சம் பேர் வரை அமர வசதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த இடம் உறுதி செய்யப்படுமா என்பது அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தால் மட்டுமே தெரியும்.
Edited by Mahendran