திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (09:21 IST)

”அண்ணன் டிடிவி”ன்னு பாசத்தோடு கூப்பிட்டதெல்லாம் மறந்து போச்சா? – மாஜி அமைச்சருக்கு தினகரன் ட்வீட்!

அதிமுகவை வலுப்படுத்த டிடிவி தினகரனை அழைக்க தயார் என ஓபிஎஸ் பேசியதை தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிலர் டிடிவி தினகரனை விமர்சித்து வருகின்றனர்.

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு முடிவுகள் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் மீண்டும் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நீடிக்கிறார்.

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த பலர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கட்சியை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறியிருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் சசிக்கலா மற்றும் டிடிவி தினகரனை இணைக்க தானே நேரில் சென்று பேசவும் தயாராக உள்ளதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள், அதிமுக பிரபலங்கள் சிலரும் நேற்று கண்டனம் தெரிவித்தும், டிடிவி தினகரனை விமர்சித்தும் பேசி இருந்தனர்.

இந்நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “கடந்த கால கசப்புணர்வா?அல்லது புரட்சித்தலைவரும் நம் அம்மா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா? எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.

மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும். இதனை உணர்ந்து செயல்பட்டால் நல்லது என்பதை,அண்ணன் TTV என்று பழைய பாசத்தோடு சொல்லும் தம்பிக்கு தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக பிரமுகரும், மாஜி அமைச்சருமான குறிப்பிட்ட நபரை குறித்துதான் டிடிவி தினகரன் சூசகமாக பதிவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.