நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை பரிதாப பலி! – திருச்சியில் அதிர்ச்சி!
திருச்சியில் முதல் நாள் சமைத்த நூடுல்ஸை அடுத்த நாள் குழந்தைக்கு கொடுத்த நிலையில் குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் தாளக்குடி ஊராட்சி மருதமுத்து நகரை சேர்ந்தவர் சேகர். இவருக்கு மகாலெட்சுமி என்பவருடன் திருமணமாகி சாய் தருண் என்கிற 2 வயது மகன் உள்ளார். சாய் தருணுக்கு உணவு அலர்ஜியால் ஒருவித புண் ஏற்பட்டு அதற்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மகாலெட்சுமி நூடுல்ஸ் தயாரித்து சாய் தருணுக்கு ஊட்டியுள்ளார். அதில் பாதியை மட்டுமே சாய் தருண் சாப்பிட்ட நிலையில் மீதத்தை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். மறுநாள் காலை அதை எடுத்து சூடு பண்ணி சாய் தருணுக்கு ஊட்டியுள்ளார்.
அதற்கு பிறகு சாய் தருண் அன்றைக்கு முழுக்க எதுவுமே சாப்பிடாமல் சோர்வாக இருந்துள்ளான். பின்னர் அன்று மாலையே திடீரென வாந்தி எடுத்து மயங்கியுள்ளான். உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றுள்ளனர்.
ஆனால் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உணவு அலர்ஜி இருந்த குழந்தைக்கு முதல் நாள் சமைத்த நூடுல்ஸை அளித்ததால் குழந்தை ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.