1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2019 ஒரு கண்ணோட்டம்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 26 டிசம்பர் 2019 (13:19 IST)

2019 ஆம் ஆண்டின் தமிழகத்தின் டாப் 10 அரசியல்வாதிகள்

2019 ஆம் ஆண்டில் அரசியல் தளத்தில் முக்கியமான பல திருப்பங்கள் நடைபெற்றது. குறிப்பாக இந்த வருடம் பல அரசியல் தலைவர்கள் சர்ச்சையான கருத்துகள் மூலமும் ஊடக வெளிச்சத்திற்கு வந்தனர். அவ்வாறு இந்த வருடத்தின் டாப் 10 லிஸ்ட்டில் யார் யார் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.

10. தங்க தமிழ்ச்செல்வன்

 

  அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அக்கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து ஊடகங்களின் வெளிச்சம் அவர் மேல் பட்டது. இதனை தொடர்ந்து பல விவாதங்கள் கிளம்பியது. பின் அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் முன்னதாக அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவியவர். தமிழக அரசியலில் ஓரளவு பரபரப்பாக பேசப்பட்ட இவர் டாப் 10 லிஸ்ட்டில் பத்தாவது இடத்தில் உள்ளார்.

09. உதயநிதி ஸ்டாலின்


  திமுக தலைவர் முக ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகம் ஆனாலும், கடந்த மக்களவை தேர்தலில் கள அரசியல் என்னும் தன்னுடைய இன்னொரு முகத்தையும் வெளிப்படுத்தினார். முன்னதாக கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த ஸ்டாலினுக்கு அடுத்ததாக தற்போது உதயநிதி அந்த பொறுப்புக்கு வந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார். வாரிசு அரசியல் என பல விமர்சனங்கள் இவர் மீது இருந்தாலும், இளைஞர்களின் மத்தியில் திமுக சார்பாக அரசியல் எழுச்சியை ஓரளவு தூண்டிவிட்டிருக்கும் இவர் டாப் 10 லிஸ்டில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

08.கமல்ஹாசன்


  மக்கள் நீதி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன், தனது கட்சியை தொடங்கியதிலிருந்து ஆளுங்கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். பின்பு இந்த வருடத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தார். குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் தனது எதிர்ப்புகளை தெரிவித்து மாணவர்களுக்கு ஆதரவு அளித்தார். கடந்த மக்களவை தேர்தலில் ஓரளவு மதிப்பான வாக்குகளை பெற்ற இவர் அதற்கடுத்த இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. இவர் இடதும் இல்லாமல் வலதும் இல்லாமல் மய்யம் தான் எனது கொள்கை என கூறி வருவதால் திராவிட, கம்யூனிஸ ஆதரவாளர்களும், வலது சாரி ஆதரவாளர்களும் இவரது அரசியல் நுழைவுக்கு விமர்சனங்கள் தெரிவித்தாலும் இளைஞர்களின் மத்தியில் திராவிடத்தை விட்டு விலகிய ஒரு அரசியல் எழுச்சியை உருவாக்கியதில் பங்கு வகித்த கமல்ஹாசன் டாப் 10 லிஸ்ட்டில் எட்டாவது இடத்தில் உள்ளார்.

07. டிடிவி தினகரன்


  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்பு வந்த எந்த இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடாத நிலையில் இவர் பக்கம் சாய்ந்த பலரும் இவரிடமிருந்து விலகி வந்தனர். குறிப்பாக தங்கத் தமிழ்செல்வன், இசக்கி சுப்பையா, புகழேந்தி உள்ளிட்ட பலரும் இவருடன் விவகாரம் ஏற்பட்டு அமமுகவிலிருந்து விலகி வெவ்வேறு கட்சிககளுக்கு தாவினர். எனினும் அதிமுக ஆதரவாளர்களில் பெருமளவு தன் பக்கம் இழுத்த டிடிவி தினகரன் இந்த லிஸ்டில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

06. சீமான்

   தமிழ்தேசிய அரசியல் கொள்கையை கையில் எடுத்து திராவிட கொள்கையிலிருந்து ஒரு பெருந்திரளான பலரை தன்னுடன் இழுத்தவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். விடுதலை புலிகள் இயக்கத்தை தோற்றுவித்த பிரபாகரனும் தானும் மிகவும் நெறுக்கமானவர் என்பது போன்ற இவரின் பேச்சுக்கள் பல முறை சர்ச்சைக்குள்ளாகியும் கேலிக்குள்ளாகியும் இருந்திருக்கிறது. குறிப்பாக இந்த வருடம் அவர் மேடையில் பேசிய பல கதைகள் நெட்டிசன்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகளுக்கு அடுத்தப்படியாக நாம் தமிழருக்கு பெரும்பானமையான வாக்குகள் விழுந்தன. மேலும் இவர் ஆளுங்கட்சியான அதிமுகவையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். குறிப்பாக சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலை குறித்து அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது. எனினும் கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே தமிழக அரசியலில் ஒரு பெரும் பரபரப்பை உண்டு செய்த சீமான் இந்த டாப் 10 பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.

05. ரஜினிகாந்த்

  தனது பாட்ஷா திரைப்படம் வந்தபோதிலிருந்தே தான் அரசியலுக்குள் நுழைவது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என கூறி வந்த ரஜினிகாந்த், திடீரென கட்சி தொடங்கப்போகிறேன் என அறிவித்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. இவர் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த நாளிலிருந்தே “தமிழகத்தில் வெற்றிடம் பரவி வருகிறது” என கூறிவந்த நிலையில் இந்த வருடம் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். குறிப்பாக திருவள்ளுவர் சிலை, காஷ்மீர் பிரிக்கப்பட்ட விவகாரம், குடியுரிமை சட்டம் ஆகியவற்றிற்கு அவர் கூறிய கருத்துகள் பரபரப்பாகவே பேசப்பட்டன. திராவிடகட்சி ஆதரவாளர்களும், இடது சாரி ஆதரவாளர்களும் ரஜினிகாந்தை பாஜகவுக்கு ஆதரவானவர் என கூறி வந்த நிலையில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய விவகாரத்தில், “திருவள்ளுவருக்கும் ,எனக்கும் காவி சாயம் பூசுகிறார்கள், ஆனால் அது என்றைக்கும் நடைபெறாது” என கூறினார். ஆனாலும், சிறிது நேரத்திலேயே தான் பேசியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என ஜகா வாங்கினார். எனினும் காஷ்மீர் பிரிக்கப்பட்ட விவகாரம், குடியுரிமை சட்டம் ஆகியவை குறித்து இவர் தெரிவித்த கருத்துகள் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகவே இருந்தது.சமீபத்தில் கூட மக்களின் நலனுக்காக கமலுடன் பயணிக்க தயார் என கூறி பரபரப்பை கிளப்பினார். கட்சியின் பெயரை கூட அறிவிக்காத நிலையிலும் அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்ட ரஜினிகாந்த டாப் 10 லிஸ்டில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

04.ஜெயக்குமார்

 தமிழகத்தின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார். திமுகவை குறித்து நையாண்டியாக பல கருத்துகளை தெரிவித்து இந்த வருடம்  ஊடகங்களின் பார்வையை மொத்தமாக தன் பக்கம் திருப்பினார். குறிப்பாக ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் கருத்துகளுக்கு இவர் தெரிவிக்கும் நையாண்டியான எதிர்கருத்துகள் ரசிக்கவைப்பதாகவும் இருந்தது. டாப் 10 லிஸ்ட்டில் ஜெயகுமார் நான்காவது இடத்தில் உள்ளார்.

03.ஓ பன்னீர் செல்வம்

 அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் துணை முதல்வராகவும் திகழும் ஓ. பன்னீர் செல்வம் இந்த வருடம் விருது நாயகனாகவே மாறினார். இந்த வருடம் மட்டும் அவருக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. அரசு முறை பயணமாக அமெரிக்கவுக்கு சென்ற ஓபிஎஸ், சிகாகோ தமிழ்மன்றம் சார்பாக “தங்க தமிழ் மகன்” என்ற விருதை பெற்றார். பின்பு ”ஆசியாவின் வளரும் நட்சத்திரம்” என்ற விருதையும் பெற்றார். அதன் பின்பு மூன்றாவதாக ”மகாத்மா காந்தி மெடல்லியன் ஆஃப் எக்ஸெல்லன்ஸ்” என்ற விருதையும் பெற்றார். இவரது மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார், கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும் இந்த வருடம் “விழா” நாயகனாகவே திகழ்ந்த ஓபிஎஸ், டாப் 10 லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

02. மு.க.ஸ்டாலின்

   கருணாநிதியின் மறைவுக்கு பின் திமுகவின் தலைவராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் இந்த வருடம் பாஜகவின் திட்டங்கள் அனைத்தையும் வீரியம் கொண்டு எதிர்த்தார். குறிப்பாக காஷ்மீர் விவகாரம், 10 சதவீத இடஒதுக்கீடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவைகளை கடுமையாக விமர்சித்தார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அவரது கூட்டணி கட்சிகளை கொண்டு பேரணியையும் நடத்தினார். கடந்த மக்களவை தேர்தலில் பெரும்பானமையான இடத்தை பிடித்து அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வும் இந்த வருடத்தின் ஒரு முக்கிய சம்பவமாக பார்க்கலாம். இடையில் இடைத்தேர்தலில் தோல்வியை தழுவினாலும் அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலையும் 2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலையும் நோக்கி தனது செயல்பாட்டை தீவிரமாக எடுத்துவைத்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் டாப் 10 லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

01.எடப்பாடி பழனிசாமி

 கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவின் சேப்டர் குளோஸ் என பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் அப்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சரிக்கு சமமான வெற்றியை பெற்றது. அதன் பிறகு விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றது. தமிழகத்தில் திமுக அலை வீச ஆரம்பித்தது என கூறியவர்களை இந்த வெற்றிகளின் பேச்சு மூச்சில்லாமல் செய்தார் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த வருடத்தில் சென்னையிலும் வெளி ஊர்களுக்கும் புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தது, சென்னையில் ஏ.சி.பஸ்களை அறிமுகப்படுத்தியது உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் இடம்பிடித்த முதல்வர் டாப் 10 லிஸ்ட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.