வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (06:44 IST)

மருத்துவர் அறிவுரை இல்லாமல் ஆவி பிடிக்கக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு

மருத்துவர் அறிவுரை இல்லாமல் ஆவி பிடிக்கக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களும் ஆவி பிடிக்கலாம் என பரவலாக கூறப்பட்ட நிலையில் தற்போது மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் ஆவி பிடிப்பது போன்ற செயல் முறைகளை பின்பற்ற கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
 
பொதுமக்கள்‌ மருத்துவரின்‌ அறிவுரை இல்லாமல்‌ முக நூல்கள்‌ மற்றும்‌ சமூக வலைதளங்களில்‌ வருகின்ற புகை போடுதல்‌ என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்‌ கொள்ள கூடாது. மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ திரு. மா. சுப்பிரமணியன்‌ அவர்கள்‌ வேண்டுகோள்‌.
 
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை உலக சுகாதார நிறுவனத்தின்‌ மருத்துவ நெறிமுறைகளின்‌ படி கொரோனா நோய்‌ தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும்‌ வழிமுறைகளை வகுத்துள்ளது. கொரோனா நோய்‌ தொற்றுக்கு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக்‌ கொள்ளவேண்டும்‌. பொது மக்கள்‌ தாங்களாகவே சுய வைத்தியம்‌ என்ற பெயரில்‌ சிகிச்சை எடுத்துக்‌ கொள்வது மிகவும்‌ தவறாகும்‌. அவ்வாறான சிகிச்சை முறைகள்‌ உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்‌. அழுத்தமான காற்று புகை போடுதல்‌ என்ற ஒன்று தற்போது பொது மக்களிடையே பரவி வருகிறது. இந்த புகை போடுதல்‌ மூலம்‌ அழுத்தமான காற்று அவர்களின்‌ வாய்‌ வழியே சென்று அவர்களின்‌ நுரையீரலை பாதிக்கும்‌ வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமல்லாமல்‌ அவர்கள்‌
வாயை திறந்து புகையை பிடிக்கும்‌ போது வைஸ்‌ கிருமியானது அருகில்‌ உள்ளவர்களுக்கு மிக வேகமாக பரவும்‌ வாய்ப்பு உள்ளது. இது மருத்துவ நெறிமுறைகளின்‌ படி இதனை மருத்துவ சிகிச்சையாக கருத முடியாது. நோய்‌ தொற்று ஏற்பட்டவுடன்‌ பொதுமக்கள்‌ தாங்களாகவே வீட்டுமுறை வைத்தியம்‌ செய்வதை விட்டு மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்‌.
 
தமிழகம்‌ முழுவதும்‌ கோவிட்‌ நோயாளிகளுக்காக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த கோவிட்‌ வைரஸ்‌ என்பது புதுமையான நோயாகவும்‌ இது நேரடியாக நுரையீரலை பாதிக்கும்‌ தன்மை உடையதாக இருப்பதாலும்‌ மருத்துவருடைய அறிவுரை இல்லாமல்‌ புகை போடுதல்‌ என்பதை பயன்படுத்தக்‌ கூடாது.
 
சித்தா கோவிட்‌ கேர்‌ மையத்தில்‌ பயன்படுத்தப்படும்‌ மருத்துவ முறையானது மருத்துவர்களின்‌ மேற்பார்வையின்‌ கீழ்‌ மாநில அரசு மருத்துவ குழு ஒன்று அமைத்து அதன்‌ வழிகாட்டுதலின்படி உள்மருந்து மற்றும்‌ பிற மருத்துவ முறைகளை கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள்‌ மருத்துவரின்‌ அறிவுரை இல்லாமல்‌ முக நூல்கள்‌ மற்றும்‌ சமூக வலைதளங்களில்‌ வருகின்ற புகை போடுதல்‌ என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்‌ கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.