மத்திய அரசின் ஆலோசனையை புறக்கணித்தது ஏன்? அன்பில் மகேஷ் விளக்கம்!
மத்திய அரசின் செயலை கண்டிக்கும் விதமாகவே தமிழக அரசு ஆலோசனையை புறக்கணித்தது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உள்ளது. இதற்கான நடவடிக்கைகள், திட்டங்கள் முன்னதாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கை உள்ளிட்ட சில திட்டங்களுக்கு தமிழகத்தில் தொடர் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் மாநில கல்வி துறை செயலாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதை புறக்கணிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது, கல்வி அமைச்சரை ஆலோசனைக்கு அழைக்காமல் துறை அதிகாரியை மத்திய அரசு அழைத்தது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் செயலை கண்டிக்கும் விதமாகவே தமிழக அரசு ஆலோசனையை புறக்கணித்தது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.