1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (11:10 IST)

கொரோனா தொற்று மதப்பிரச்சனை இல்லை: முருகன் அறிக்கை!!

குறிப்பிட்ட மதத்தினர் தன கொரோனா பரவலுக்கு காரணம் என தேவையற்ற விவாதம் ஏற்பட்டு வரும் சூழலில் பாஜக தலைவர் முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு... 
 
இந்தியாவில் கொரோனாவின் பரவலைத் தடுத்திட மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவுக்கும் கொரோனாவுக்கும் இடையே ஒரு பெரிய போர் நடந்து வருவதைப்போல நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. 
 
கொரோனாவை வீழ்த்திட முதல் நடவடிக்கை அவரவர் வீடுகளில் தனித்திருத்தல் தான். இதை நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இந்நிலையில் தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சென்றிருந்த சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தமிழகம் திரும்பி இருப்பதாக தெரியவருகிறது. 
 
மாநாட்டில் கலந்து கொண்ட பல வெளிநாட்டினரும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பாமல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்குச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. மாநாட்டின் போதும் பயணத்தின் போதும் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளால் சம்பந்தப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழக மக்களின் நலன் கருதி இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்தம் குடும்பத்தினர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். 
 
இதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் அரசியல் மத பிரச்சினைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.