பாஜக-வா இருந்தாலும் தப்புன்னா தப்புதான்! – பில்கிஸ் பானுவுக்கு நியாயம் கேட்ட குஷ்பூ!
பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நடிகையும், தமிழக பாஜக பிரமுகருமான குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்த வன்முறையில் குஜராத் மாநிலம் ரந்தீக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானோ என்ற பெண்ணை 11 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. அப்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். மேலும் அந்த கும்பல் பானோவின் உறவினர்கள் சிலரையும் கொன்றது.
இது தொடர்பான வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானோவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில் குஜராத் அரசு விரும்பினால் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை வழங்கலாம் என அனுமதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து குஜராத் அரசு அவர்களை மன்னித்து விடுதலை செய்துள்ளது.
இந்த குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக எதிர்கட்சிகள் மற்றும் பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குற்றவாளிகள் விடுதலையை நியாயப்படுத்தி குஜராத் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உயிருக்கு பயந்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். அப்படியான வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்யப்பட கூடாது.
அப்படி விடுதலை செய்யப்பட்டால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் அவமானமாகும். பில்கிஸ் பானு மட்டுமல்ல, வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
குஜராத்தில் ஆளும் பாஜக அரசு எடுத்த முடிவை எதிர்த்து தமிழக பாஜக பிரமுகரான குஷ்பூ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.