வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (15:54 IST)

திருநெல்வேலி - தூத்துக்குடி பாசஞ்சர் ரயில் சேவை ரத்து! - ரயில்வே கொடுத்த விளக்கம்!

பல காலமாக திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில் சேவையை நிறுத்துவதாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே செயல்பட்டு வந்த பாசஞ்சர் ரயில் சேவையானது எளிய மக்கள் பலரும் பயணம் செய்து வந்த ரயில் சேவையாக இருந்து வந்தது. காலை 7.35க்கு திருநெல்வேலியில் புறப்பட்டு தாழையூத்து, கங்கை கொண்டான், நாரைக்கிணறு, வாஞ்சி மணியாச்சி, கைலாசபுரம், தட்டப்பாறை, துத்தி மேலூர் வழியாக காலை 9.20க்கு தூத்துக்குடி சென்றடையும் இந்த ரயில் உள்ளூர் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது.

 

இந்நிலையில் தற்போது பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை செயல்பட்டு வந்த பாலறுவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீடிக்கப்பட்டுள்ளதால், திருநெல்வேலி - தூத்துக்குடி பாசஞ்சர் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காலை 7.35க்கு புறப்பட்டு 9.20க்கு செல்லும் பாசஞ்சர் ரயில் சேவையால் பல சிற்றூர்களுக்கும் எளிதில் செல்ல முடிந்ததாகவும், ஆனால் பாலறுவி விரைவு ரயிலோ இடையே துத்தி மேலூரில் மட்டுமே நிறுத்தப்படும் என்பதால் பல சிற்றூர்களுக்கும் செல்லும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பாலறுவி விரைவு ரயில் காலை 4.30 மணிக்கு திருநெல்வேலி வந்து அங்கிருந்து காலை 6.40 மணிக்கெல்லாம் தூத்துக்குடி சென்றுவிடும் என்பதால் விடியற்காலையிலேயே ரயிலை சென்று பிடிக்க முடியாது என்பதும், கட்டண அளவிலும் பாசஞ்சர் ரயிலை விட விரைவு ரயிலில் கட்டணம் உயர்வு என்பதும் மக்களின் குறையாக உள்ளது.

 

Edit by Prasanth.K