1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 7 அக்டோபர் 2017 (16:46 IST)

சினிமா டிக்கெட் விலை இப்போது எவ்வளவு தெரியுமா?

சினிமா தியேட்டரில் டிக்கெட் விலையை உயர்த்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் காரணமாக, டிக்கெட்டின் விலை அதிர்ச்சிகரமாக அதிகரித்துள்ளது.


 

 
ஜி.எஸ்.டி-ஐ தொடர்ந்து சினிமா தியேட்டரில் ரூ.100 க்கும் குறைவான டிக்கெட்டிற்கு 18 சதவீத வரியும், அதற்கு மேல் விலை உள்ள டிக்கெட்டிற்கு 28 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரூ.80 ஆக இருந்த டிக்கெட்டின் விலை ரூ. 94 ஆகவும், ரூ.120 ஆக இருந்த டிக்கெட்டின் விலை ரூ.154 ஆகவும் உயர்ந்தது. 
 
அந்நிலையில், தமிழக அரசு சார்பில் 30 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அது 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனாலும், ஜி.எஸ்.டி 38 சதவீதம் மற்றும் கேளிக்கை வரி 10 சதவீதம் என மொத்தம் 48 சதவீத வரியை எங்களால் செலுத்த முடியாது என திரையுலகினர் போர்க்கொடி தூக்கினர். 
 
மேலும், புதிய படங்களை திரையிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. ஆனால், அரசு அதை கண்டு கொள்ளவில்லை. எனவே, தியேட்டரில் டிக்கெட் விலையை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என  தமிழ் சினிமா உலகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, டிக்கெட்டின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
 
அதன்படி, சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை வரி சேர்த்து டிக்கெட்டின் விலை ரூ.220 ஆக உயர்ந்துள்ளது. மல்டிபிளக்ஸ் அல்லாத தியேட்டர்களில் ரூ.193 வசூலிக்கப்படுகிறது.


 

 
இதனால், மல்டிபிளக்ஸ் தியேட்டரிக்கு ஒருவர் படம் பார்க்க சென்றால் டிக்கெட்டின் விலை, பார்க்கிங், திண்பண்டங்கள் என சேர்த்து ரூ.300 ஐ தாண்டுகிறது. 3 பேர் கொண்ட குடும்பம் எனில் ரூ.1000 தேவைப்படும் நிலையும், ஐந்து பேர் கொண்ட குடும்பம் எனில் ரூ.1500 செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதில், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால், குறைந்தபட்சம் ரூ.15 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதையும் சேர்த்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் அதிக பட்சம் டிக்கெட் விலை ரூ.250-ம், மற்ற தியேட்டர்களில் ரூ.223ம் வசூலிக்கப்பட இருக்கிறது.
 
ஏற்கனவே ஜி.ஸ்.டி காரணமாக டிக்கெட் விலை உயர்ந்துள்ளதால், தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதில், அரசின் கேளிக்கை வரியையும் ரசிகர்களின் தலையில் சுமத்தினால், தியேட்டர்கள் காத்து வாங்கும் நிலை ஏற்படும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.