திருவண்ணாமலையில் தம்பதிகளை தாக்கிய மூன்று காவலர்கள் இடமாற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த ஆட்டொ ஓட்டுனர் ராஜா, தனது மனைவி மற்றும் மகனுடன் இன்று செங்கம் பஜார் தெருவுக்கு வந்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்களுக்குள் சண்டையானது.
இதை கவனித்த போலீஸ்காரர்கள் மூவர் அவர்களை விசாரித்துள்ளனர். அப்போது இது எங்கள் குடும்ப விஷயம் நீங்கள் தலையிட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதில் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த மூன்று போலீசாரும், கணவன், மனைவி மற்றும் மகனை ஆத்திரம் தீர லத்தியால் அடித்து துவைத்தனர். இதில் அவர்கள் மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தனியார் தொலைக்காட்சிகளில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்ட பலரும் போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு பக்கம், ராஜாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விசாரிக்க சென்ற இடத்தில் லத்தியால் அடித்து காயப்படுத்திய காவலர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். ஆனாலும், சமாதானம் அடையாத பொதுமக்கள் திருவண்ணாமலை-பெங்களூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் செங்கத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனவே, சம்பந்தப்பட்ட அந்த மூன்று போலீசாரையும், ஆயுதப்படைக்கு மற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.