தவெக மாநாடுக்கு வந்தவர்களின் உயிரிழப்பு 3ஆக உயர்வு.. தலைவர் மட்டும் ஏசி கேரவனில்..!
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் இதுவரை லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் இருப்பதாகவும் மேலும், இன்னும் அதிக தொண்டர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் விபத்துகள் இல்லாமல் நடைபெறும் மாநாடாக இருக்க வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அவர் நிர்வாகிகளுக்கும் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ஆனாலும் எதிர்பாராத வகையில் சில விபத்துகள் ஏற்பட்டுள்ளன; இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. திருச்சியிலிருந்து மாநாட்டிற்கு வந்த தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது, அதில் ஆறு பேர் பயணித்த நிலையில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஏற்கனவே, சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு வந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தவெக தலைவர் விஜய், பாதுகாப்பாக கேரவனில் உள்ளார்.
Edited by Siva