புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2024 (12:23 IST)

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் சீமானுக்கு திருமா ஆதரவு! - உருவாகிறதா நா.த.க - வி.சி.க கூட்டணி?

thirumavalavan

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் சீமான் கூறிய கருத்து குறித்து திருமாவளவன் விளக்கமளித்து பேசியுள்ளார்.

 

 

சமீபத்தில் டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றபோது ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் “திராவிட நல் திருநாடும்” என்ற வார்த்தை நீக்கப்பட்டிருந்தது.  இதுகுறித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதுள்ள தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்க வேண்டும் என்ற ரீதியில் பேசியிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சீமானின் கருத்து குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த விசிக தலைவர் திருமாவளவன் “சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தையே நீக்கி விடுவேன் என கூறவில்லை. அதற்கு பதிலாக செறிவு மிகுந்த வேறு ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை இடம்பெற செய்வேன் என்றுதான் பேசியிருந்தார். அவருக்கு திராவிடம் என்ற கருத்தாக்கத்தின் மீது விமர்சனங்கள் உள்ளதால் அவ்வாறு பேசியுள்ளார். திராவிடம் என்பது ஒரு மரபினம். தமிழன் என்பது தேசிய இனம். திராவிட மரபினத்திற்குள் உள்ள தேசிய இனங்களில் தமிழும் ஒன்று. இதை குழப்பிக் கொள்ள கூடாது” என்று கூறியுள்ளார்.

 

சமீபமாக திருமாவளவனை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்து பேசியதை சீமான் கண்டித்த நிலையில், தற்போது சீமானுக்கு ஆதரவாக திருமாவளவன் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

 

Edit by Prasanth.K