''அவர்கள் விவசாயிகள்... கிரிமினல்கள் அல்ல''- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் ஆதரவு
டெல்லியில் நேற்று முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறிவித்து தலைநகர் நோக்கி படையெடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு எம்.எஸ்.சுவாமி நாதனின் மகள் மதுரா சுவாமிநாதன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
கடந்த 12 ஆம் தேதி 2 மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
எனவே, உ.பி., ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறி வருகின்றனர்.
இவர்கள் நுழைவதை தடுக்க அரசு எல்லைகளில் போலீஸாரை குவித்து, தடுப்புகளை வைத்து வருகின்றனர்.
நேற்று டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசியும், தடியடியும் நடத்தப்பட்டது, இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
இன்று 2 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகள் மீதான தாக்குதல் பற்றி இந்திய வேளாண் விஞ் ஞானியும் சமீபத்தில் மத்திய அரசால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட எம்.எஸ்.சுவாமி நாதனின் மகளும் பொருளாதார நிபுணருமான மதுரா சுவாமிநாதன் இந்திய வேளாண் ஆராய்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ''டெல்லியை நோக்கி விவசாயிகள் செல்கின்றனர். ஹரியானாவின் அவர்களுக்கு சிறைகள் தயாராகி வருவதாக செய்தித்தாள்களில் படித்தேன். அவர்கள் விவசாயிகள். கிரிமினல்கள் அல்ல. அவர்களை கிரிமினல்களை போல நடத்தக் கூடாது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.