”ரொம்ப பசிக்குது.. மன்னிச்சிடுங்க” – கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்!
மதுரையில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய திருடன் ஒருவன் கடை உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
மதுரை உசிலம்பட்டியில் சூப்பர்மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார் ராம்பிரகாஷ் என்பவர். வழக்கம்போல இரவு கடையை பூட்டிவிட்டு சென்று விட்டு காலை திரும்பிய போது கடை பூட்டை உடைத்து யாரோ திருடியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சூப்பர் மார்க்கெட்டில் இருந்து 65 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்களும், கல்லாவில் இருந்த 5 ஆயிரம் பணமும் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடை உரிமையாளருக்கு திருடன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் ”திருடியதற்காக மன்னித்துவிடுங்கள். எனக்கு ரொம்ப பசிக்கிறது. இது உங்களுக்கு ஒரு நாள் வருவாய். ஆனால் எனக்கு மூன்று மாதம் வருவாய்க்கு சமம்.” என்று எழுதியுள்ளான் அந்த திருடன். மேலும் போலீஸிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று சிசிடிவி பதிவையும் தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.