‘காப்பான்’ படம் ஓடிய தியேட்டர் மேனேஜரை அடித்து நொறுக்கிய அமமுகவினர்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் காப்பான் திரையிடப்பட்ட நிலையில் அந்த திரையரங்க மேலாளரை அமமுகவை சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அமமுக ஒன்றிய செயலாளர் மில்லர் என்பவர் தனது மனைவியுடன் காப்பான் படம் பார்க்க ஒரு திரையரங்கிற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவருக்கும் அந்த தியேட்டரின் மேனேஜர் மரி அலெக்சாண்டர் என்பவருக்கும் பார்க்கிங் செய்வதில் சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது
இதனையடுத்து படம் பார்க்காமல் திரும்பிய மில்லர், அடியாட்களுடன் வந்து தியேட்டர் மேனேஜர் மரி அலெக்சாண்டரை அடித்து காயப்படுத்தியதோடு, தியேட்டரையும் அடித்து நொறுக்கியுள்ளார். இதனால் படம் பார்த்தவர்கள் சிதறி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அமமுக பிரமுகர் மில்லர் உள்பட ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தேடப்படுபவர்களில் ஒருவர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது