சென்னையை வெளுக்கத் தொடங்கிய வெயில்..! நெருங்கி வரும் கோடைக்காலம்!
குளிர்காலம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தை தொடர்ந்து வந்த குளிர் காலம் தற்போது வரை தமிழகத்தில் நீடித்து வருகிறது. மார்கழி, கார்த்திகை மாதங்களில் பல பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. தற்போது மாசி மாதம் பிறந்தது முதலாக அதிகாலை பனிப்பொழிவு குறையத் தொடங்கியுள்ளது.
முக்கியமாக சென்னையில் பல பகுதிகளில் கடந்த வாரம் முதலாகவே வெயில் அதிகரித்துள்ளது. காலை 10, 11 மணிக்கு மேல் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் கோடைக்காலமே தொடங்காத நிலையில் வெயில் இப்படி வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், கோடைக்காலத்தில் உஷ்ணம் மேலும் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர் “வரும் காலங்களில் பனிப்பொழிவு முழுவதும் குறைந்துவிடும். கோடைக்காலம் தொடங்கப்போவதற்கான அறிகுறியாகவே தற்போது வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இனிவரும் நாட்களில் வெயில் இன்னும் அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K