செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2024 (11:51 IST)

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி..! பிரதமர் மோடி பேச்சு..!!

PM Modi
பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
 
திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
 
பின்னர் விமான நிலையத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் ஆங்காங்கே மேடை அமைத்து பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. சாலையில் திரண்டிருந்த பாஜகவினர் பிரதமரின் கார் கடந்தபோது மலர் தூவினர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வந்த பிதமர் மோடி,  அங்கு பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
 
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.   எனது மாணவ குடும்பமே என தமிழில் உரையை தொடங்கிய  அவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வரும் முதல் பிரதமர் என்பது பெருமை அளிக்கிறது என்றார்.
 
பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டது என தெரிவித்த பிரதமர் மோடி பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று புகழாரம் சூட்டினார். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்றும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். முன்னதாக  33 பேருக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார்