தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: குவிந்த மக்கள்!
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறுவதயொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் படையெடுத்துள்ளனர்.
ஆயிரத்து பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சோழ பேரரசன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் தமிழகத்தின் புராதாண பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழாவானது சில காரணங்களால் 2006ல் நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் 23 ஆண்டுகள் கழித்து இன்று குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது.
குடமுழுக்கை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் தஞ்சாவூர் வருவதால் பெரிய கோவில் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. புதிய பேருந்து நிலையம் வருபவர்கள் அங்கிருந்து பெரிய கோவிலுக்கு இயக்கப்படும் இலவச பேருந்துகளில் ஏறி பெரிய கோவிலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணிக்கு ராஜகோபுர குடமுழுக்கு நடைபெற இருப்பதால் மக்கள் கூட்டம் காலையிலேயே அதிகரித்து காணப்படுகிறது.