1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (13:34 IST)

தமிழை விடப் பழமையானதா சமஸ்கிருதம் ? – பாடப்புத்தகத்தால் மீண்டும் சர்ச்சை !

12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது எனத் தவறான தகவல் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2019-2020 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே பாரதிக்கு காவி தலைப்பாகை அணிவித்தது தொடர்பான சர்ச்சைகள் முடிந்துள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழமையான மொழி  என குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சமஸ்கிருத மொழி கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழி எனவும் கூறப்பட்டுள்ளது. இது சம்மந்தமானப் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவிக்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சம்மந்தப்பட்டா அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ‘பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் இதுவரை 19 தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் தவறுகள் இருந்து அவை சுட்டிக்காட்டப்பட்டால் அவை உடனடியாக சரிசெய்யப்படும்’ எனக் கூறியுள்ளார்.