மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்கு காத்திருக்க தேவையில்லை! – கோவில்களில் சிறப்பு ஏற்பாடு!
மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான கோவில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. கோவில்களுக்கு சாதாரண மக்களை போலவே மாற்றுத்திறனாளிகளும் தரிசனம் செய்ய வரும் நிலையில் அவர்களுக்கு வசதிகள் கோவில்களில் இல்லாததால் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 48 முக்கியமான முதுநிலை திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளி பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட அந்த கோவில்களில் முகப்பில் மாற்றுதிறனாளிகளை அழைத்து செல்வதற்கான சக்கர நாற்காலிகள் மற்றும் அதை இயக்க ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். சக்கர நாற்காலிகள் கோவிலுக்குள் சென்று வர சாய்வு தளங்கள் அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.