வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (10:41 IST)

விருது தறோம் வாங்க; ஆசைக்காட்டி தொழிலதிபர் கடத்தல்! – ஸ்கெட்ச் போட்ட போலீஸ்!

விருது தருவதாக கூறி கடத்தப்பட்ட சென்னை தொழிலதிபரை ப்ளான் போட்டு மீட்ட போலீஸாரை பலரும் பாராட்டியுள்ளனர்.

சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கணேஷ்குமார். சமீபத்தில் இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம கும்பல் அவருக்கு சிறப்பு விருது வழங்க உள்ளதாகவும், இதற்காக திண்டுக்கல் அருகே கோடைரோடு பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் விருது வழங்கும் விழாவிற்கு வருகை தருமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதை நம்பிய கணேஷ்குமாரும் விருது விழாவிற்காக திண்டுக்கல் சென்றுள்ளார். செல்லும் வழியில் மர்ம கும்பல் ஒன்று அவரை கடத்தி சென்றுள்ளது. விருது வாங்க சென்ற கணேஷ்குமார் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பதட்டத்தில் ஆழ்ந்த நிலையில், கணேஷ்குமாரின் அலுவலகத்திற்கு கால் செய்த கடத்தல்காரர்கள் ரூ.10 லட்சம் கொடுத்தால் கணேஷ்குமாரை விடுவிப்பதாகவும், அலுவலகத்திற்கு பணத்தை வாங்க தங்கள் ஆட்கள் வருவார்கள் எனவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்து கடத்தல்காரர்கள் ஈரோட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கடத்தல்காரர்கள் கேட்டப்படி ரூ.10 லட்சத்தை கொடுக்க சொன்ன போலீஸார் கணேஷ்குமார் விடுவிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டனர். பின்னர் பணத்தை வாங்கிச் சென்ற நபர்களை பின் தொடர்ந்த போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். ஈரோட்டில் இருந்த கடத்தல்காரர்கள் தப்பி சென்ற நிலையில் அவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.