செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2016 (12:53 IST)

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி : உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி : உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் விதமாக, நீதித்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டும் மற்றும் தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும், அதற்காக ஆகும் செலவுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜி.கிருஷ்ண மூர்த்தி, யானை ராஜேந்திரன் மற்றும் ஜி.எஸ்.மணி ஆகியோ 2001 மற்றும் 2002ம் ஆண்டு தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
 
அதேபோல், 2010-2011ம் ஆண்டுகளில் கீழ் நீதிமன்றங்களுக்கு மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு ரூ.9.40 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என 2011ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக வந்து வழக்குப்பதிவு செய்து உத்தரவிட்டது.
 
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 14 ஆண்டுகளுக்கும் மேலாகியும், நீதித்துறைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்காமல் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
 
தமிழக அரசின் மனுவை படித்து பார்த்தோம். ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றான நீதித்துறைக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஜூடிசியல் அகடாமிக்கு போதிய நிதியை ஒதுக்காததால், நீதிபதிகளுக்கு நடத்த வேண்டிய 2 பயிற்சி வகுப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 
 
அரசு மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. 
 
மேலும், மத்திய அரசு ஒதுக்கிய ரூ.150 கோடி நிதியை, தமிழக அரசின் திறமையற்ற மற்றும் இயலாமைத்தனத்தால், அந்த நிதி காலாவதி ஆகி, மீண்டும் மத்திய அரசிற்கே திரும்பி சென்றுவிட்டது. இதற்கு தமிழக அரசுதான் முழுக் காரணமாகும்.  தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், 2016-17  நிதியாண்டில் வெறும், ரூ.50 கோடியை மட்டுமே மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. ஆனால், தற்போது அந்த நிதி போதவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. 
 
தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிலும், நீதித்துறைக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குவது பற்றி எந்த தகவலும் இல்லை.
 
தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதா?. மற்ற துறைகளுக்கும் போதிய நிதியை ஒதுக்க முடியாமல் திணறுகிறதா? ஆம் என தமிழக அரசு கூறினால், இந்திய அரசியலைமைப்பு சட்டப்பிரிவு 360-ன் கீழ் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என நாங்கள் எச்சரிக்கிறோம்.
 
இதுபற்றி தமிழக நிதித்துறை செயலாளர் விரிவான பிரமாண மனுவை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும்” என அவர்கள் தீர்ப்பு வழங்கினர்.